தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த சந்தோஷ்குமார், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
அந்தப் பொறுப்பில் இருந்த ரூபேஷ்குமார் மீனா மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரூபேஷ்குமார் மீனா, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த காமினி ஐ.பி.எஸ்., காவல்துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.