வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் நட்டி நடராஜ் தெரிவித்துள்ளார். இளம் படக்குழுவினரின் புதிய முயற்சியைப் பாராட்டியுள்ள அவர், திரைப்படத்தைப் பார்த்து ரசிக்குமாறு ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கனவில் மட்டுமே சாத்தியமாகும் என நினைக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால் என்னவாகும் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு ‘ட்ரோன்ஸ்’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹாரர், பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் ஆகிய அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், ஏஞ்சல், சூனியக்காரி எனப் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி கலந்த பேண்டஸி ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை ஜி.எம். மார்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம். மார்கன் தயாரித்துள்ளார். சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 16ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் நட்டி நடராஜ் ‘ட்ரோன்ஸ்’ படக்குழுவைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் வெளியீட்டு கால அனுபவத்தையும் தற்போதைய ‘ட்ரோன்ஸ்’ படத்தின் வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
Advertisement
‘சதுரங்க வேட்டை’ வெளியானபோது, அதன் வித்தியாசமான கதையும் புதிய முயற்சியும் இருந்தபோதிலும் தொடக்கத்தில் குறைவான திரையரங்குகளிலேயே படம் திரையிடப்பட்டது என நட்டி நடராஜ் நினைவுகூர்ந்துள்ளார். ஆரம்பகட்ட சிரமங்களைக் கடந்து, ரசிகர்கள் ஒருவருக்கொருவர் படத்தைப் பரிந்துரைத்ததன் மூலம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்திலும் இதேபோன்ற வளர்ச்சியைப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய சிந்தனையுடன் துணிச்சலாகப் படத்தை உருவாக்கிய இளம் குழுவினரின் முயற்சி ரசிகர்களைக் கவர்ந்து, திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், ‘ட்ரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த நட்டி நடராஜ், இந்த வரவேற்பு அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரம் என்றும் தெரிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசிக்குமாறும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நட்டி நடராஜின் இந்தப் பாராட்டு, ‘ட்ரோன்ஸ்’ படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.