தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2027 மார்ச் மாதத்துக்குப் பிறகே நடைபெற வாய்ப்பு
தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், உள்ளாட்சித் தேர்தல் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகே நடைபெற வாய்ப்புள்ளதாக அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளை வரையறை செய்தல், நிர்வாக அலகுகளை மறுசீரமைத்தல், இடஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள் எனப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முழுமையடையாததே தேர்தல் தாமதத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 9 மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கத் தனி அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பதவிக்காலம் நிறைவடைந்த மற்ற 28 மாவட்டங்களில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலமும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தாமதத்துக்குப் பல்வேறு காரணங்கள் இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வரையறைப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றார். மேலும், டிசம்பர் மாதம் வரை பருவமழை தொடர்பான பணிகள் மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.