Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 21 அக்டோபர் 2026 | 4 ஐப்பசி பராபவ வருடம்

குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்த முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்த முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தசரா விழா பிரசித்தி பெற்றதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். பல்வேறு தெய்வங்களின் வேடங்களை அணிந்த அவர்கள் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர். பல பகுதிகளில் கோவில்களுக்கு அருகே காளி பிறை அமைத்து தங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். தசரா குழுக்களாக இணைந்த பக்தர்கள் வாகனங்களில் பயணித்து காணிக்கை சேகரித்தனர். விழா நடைபெற்ற நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டன. இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழை, போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் குவிந்த பக்தர்கள் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி மற்றும் 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வந்தனர். இதற்கிடையே, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கோவிலுக்குச் செல்லும் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பக்தர்கள் பலர் அக்னிச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், காளி வேடமணிந்தும் ஊர்வலமாக வந்தனர். அம்மனைத் தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாகக் காணப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நேற்று இரவு 10 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

Advertisement
பின்னர் சூரனை வதம் செய்யும் சூலாயுதத்துடன் பட்டர் அய்யப்பன் மண்டகப்படிக்கு வந்தார். அங்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளினார். அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் ஆணவத்தின் அடையாளமாக விளங்கிய மகிஷாசூரன் அம்மனை மூன்று முறை வலம் வந்து போரிடத் தயாரானான். அப்போது முத்தாரம்மன் தனது சூலாயுதத்தால் அவனை வதம் செய்தார். தொடர்ந்து சிங்க முகம் கொண்ட உருவத்தில் மீண்டும் போரிட வந்த மகிஷாசூரனையும் அம்மன் அழித்தார். அதன்பிறகு எருமை முகத்துடன் ஆவேசமாகப் போரிட வந்த அவனைச் சூலாயுதத்தால் வதம் செய்தார். இறுதியாகச் சேவல் உருவம் எடுத்து எதிர்த்த மகிஷாசூரனையும் அன்னை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வைக் காணக் கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் காளி, ஜெய் காளி’ என பக்தி முழக்கங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிதம்பரேஸ்வரர் கோவில் அருகிலும் சாந்தாபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் மிதவைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தற்காலிகப் பேருந்து நிலையங்களும் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இன்று காப்பு களைதல்; நாளை திருவிழா நிறைவு சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதியுலா புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு அம்மன் கோவிலை வந்தடைந்ததும் கொடி இறக்கப்பட்டு காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து பக்தர்கள் தங்களது காப்புகளைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெற உள்ளது.தசரா திருவிழாவின் இறுதி நாளான நாளை மதியம் 12 மணிக்கு அம்மனுக்குச் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடையும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு