தாராபுரம் நா.த.க. வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலின்போது ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர். சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். நான்கு வழக்குகளில் நடவடிக்கை தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் சென்ற பாதையில் கார்த்திகா கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் சென்ற பாதையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் பதாகையை அகற்றியபோது, போலீசாரை அவதூறாகப் பேசி தாக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, காமராஜபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில், குழந்தையுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டரைத் தாக்கியதாகவும், அவதூறான வீடியோவைப் பதிவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இச்சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் மீது 12-க்கும் மேற்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவையில் கைது செய்யப்பட்ட கார்த்திகா இந்த வழக்குகள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கார்த்திகா மற்றும் அவரது கணவர் முருகு சந்திரகுமார் ஆகியோரை கோவையில் உள்ள அவர்களது வீட்டுக்குச் சென்ற போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தென்காசியைச் சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக்பரீத், தாராபுரம் நகரப் பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறைச் செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறைச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.