உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 17-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், மதுரை மாநகர காவல்துறை கூடுதல் போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், சீருடை இல்லாமல் மப்டியில் செயல்படும் போலீசாரும் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னதாக மாசி வீதிகளில் சைக்கிள் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 4 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
Advertisement
அவற்றைப் பயன்படுத்தி இரவு, பகல் என 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக அவர்களுக்கு ஒலிபெருக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குதிரைப்படை போலீசாரும் ரோந்துப் பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக 2 குதிரைகளில் போலீசார் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.