தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு நீண்ட வரலாறு உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பாகவே, 1923-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி அரசு தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு, மெட்ராஸ் மாகாணத்தின் முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார். 1956-ம் ஆண்டு மக்கள் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். பின்னர், காமராஜர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்தை, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது சத்துணவுத் திட்டமாக மாற்றினார். இதற்கு ‘முதல்-அமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலங்களிலும் இத்திட்டத்தில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதுடன், பள்ளி வருகையை அதிகரித்து இடைநிற்றலைத் தடுக்கும் நோக்கில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக 2022-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திட்டத்துக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் இன்று தொடங்கப்பட்டது.
Advertisement
சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது மாணவர்களுக்கு சக்கரைப் பொங்கலை விஜய் பரிமாறினார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து அவரும் உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். வகுப்பறையில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களை சந்தித்தபோது, ஒரு மாணவனின் அருகில் விஜய் அமர்ந்தார். அப்போது அந்த மாணவன் மழலைக் குரலில் தண்ணீர் கேட்டார். உடனே பணியாளரிடம் இருந்து தண்ணீரைப் பெற்று அந்த மாணவனுக்கு விஜய் வழங்கினார். மேலும், மாணவர்கள் பாடிய ரைம்ஸ் பாடல்களுக்கு கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த விஜய்யின் புகைப்படங்களை, முன்னாள் முதல்-அமைச்சர்களான காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். மாணவர்களுடன் கலந்துரையாடிய புகைப்படங்களுடன் இணைத்து த.வெ.க. தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், மாணவர்களுக்கு விஜய் உணவு பரிமாறும் புகைப்படத்துடன், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்கு உணவு வழங்கிய புகைப்படத்தையும் இணைத்து, “அன்றும்... இன்றும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வந்த விஜய், மாணவர்களுக்கு சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாகக் கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உணவருந்துவதற்கு முன் தனது கைகளையும் கழுவினார். மாணவர்களுடன் அமர்ந்து விஜய் உணவருந்தியபோது, ஒரு மாணவி கடவுளை வேண்டிய பிறகு உணவை சாப்பிடத் தயாரானார். அந்த சிறுமியின் செயலை விஜய் நீண்ட நேரம் கவனித்தார். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.