நடிகர் ராகவா லாரன்ஸ் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’ மற்றும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் அவர் கர்ணனாக நடிக்கிறார். இந்நிலையில், கர்ணன் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இடம்பெற்றுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் 5 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், புராணங்களில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணன் வேடத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தன்னைத் தேடி வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கியதுடன் திரைப்படம் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், ரசிகர்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.