பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை, வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.
Advertisement
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் விஜய்யும் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் செல்லும் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாகப் பசும்பொன்னை வந்தடைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகப் பசும்பொன்னில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளமும், இரும்புத் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்பதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.