கணவன், மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் கொள்ளை: முகமூடி கும்பலால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கணவன்-மனைவியை கட்டிப்போட்டு மிரட்டி, 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையோரத்தில் வைரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இவர் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (55). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், வைரவன் மற்றும் சுமதி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், வைரவனின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. முதலில் மாடியில் உள்ள அறைகளை சோதனையிட்டுள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால், கீழ் பகுதியில் இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.கதவு உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு சுமதி எழுந்து வந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி இருவரையும் பிடித்து கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் வீட்டில் பணம் மற்றும் நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று கேட்டு மிரட்டியுள்ளனர். தகவல் தெரிவிக்காததால் வைரவனை கத்தியால் கிழித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து தம்பதியை இறுக்கமாக கட்டிவைத்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.கொள்ளை நடந்தது குறித்து வைரவன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.