ஐபோனுக்கு பதிலாக தாடி எண்ணெய் வந்த விவகாரம்: ஆன்லைன் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் செலுத்த உத்தரவு
மும்பையில், ஆன்லைனில் ஆர்டர் செய்த விலையுயர்ந்த ஐபோனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனம் மற்றும் அதன் விற்பனையாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் சுமார் ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மும்பை போவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 2023 ஏப்ரல் 22-ஆம் தேதி பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் ரூ.1,11,793 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடலை ஆர்டர் செய்தார். ஆனால் அவரிடம் வந்த பார்சலைத் திறந்தபோது, செல்போனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் பாட்டிலும் சில பேக்கிங் பொருட்களும் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் குறித்து அவர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் மும்பை நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றத்தை அணுகினார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவறான பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்பியது பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளரின் சேவை குறைபாடாகும் என்று உறுதி செய்து, பாதிக்கப்பட்ட நபருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.அதன்படி, ஐபோனுக்காக செலுத்தப்பட்ட ரூ.1,11,793-ஐ, ஆர்டர் செய்யப்பட்ட 2023 ஏப்ரல் 22 முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மேலும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.20,000 வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த டெலிவரி பிழைக்கு ஆப்பிள் இந்தியா நிறுவனத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், அந்த நிறுவனம் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், நீதிமன்றம் நிர்ணயித்த மொத்தத் தொகையையும் 45 நாட்களுக்குள் பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் இணைந்து பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் விற்பனையில் ஏற்படும் சேவை குறைபாடுகளால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இந்தத் தீர்ப்பு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.