'உழவர் ஏஐ' திட்டம் அறிமுகம்... வேளாண் பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டசபையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். இதற்கு முன், அதே நிதியாண்டிற்கான த.வெ.க. அரசின் முதல் பொதுப் பட்ஜெட் நேற்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக "உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்" அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் வினோத் அறிவித்தார்.இதுகுறித்து அவர் பேசுகையில், சரியான நேரத்தில் கிடைக்கும் வேளாண் தகவல், விவசாயத்திற்கு சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு இணையான பயனை அளிக்கும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மண் வளம், பயிர் சாகுபடி உள்ளிட்ட முக்கிய தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.இந்தத் திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரவழி கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் வளம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு உள்ளிட்ட விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள், அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அறிவுசார் வேளாண் சேவைகள் அனைத்தையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி மூலமாக எளிதில் பெறும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை" 2026-27ஆம் ஆண்டில் செயல்படுத்த மாநில நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார்.