20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் திறம்பட செயல்பட்டு பதக்கங்களைச் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் யஷ்வீர் சிங் 85.72 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் தனது தனிப்பட்ட சிறந்த செயல்பாட்டையும் பதிவு செய்தார். மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
Advertisement
இலங்கையின் ரூமேஷ் பத்திரகே 88.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் என இரட்டைப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 9-வது நாளில் இந்தியா மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களாக உயர்ந்துள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 12-வது இடத்தில் உள்ளது.