இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
இந்திய அரசியலில் பல்வேறு காலகட்டங்களில் சர்ச்சைகள், விபத்துகள் மற்றும் தார்மீகப் பொறுப்புகளை ஏற்று மத்திய அமைச்சர்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள் வருமாறு: 1956 நவம்பரில், அரியலூர் ரயில் விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். 1958 பிப்ரவரியில், முந்த்ரா நிதி ஊழல் விவகாரத்தைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். 1962 நவம்பரில், சீனாவுடனான போரின் போது இந்திய ராணுவம் போதுமான அளவில் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1987 ஏப்ரலில், எச்.டி.டபிள்யூ. நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மற்றும் பேர்பாக்ஸ் விவகாரம் உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வி.பி. சிங் விலகினார். 1993 ஜனவரியில், குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரஷ்யாவின் Tu-154 விமான விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா பதவியை ராஜினாமா செய்தார். 1999 ஆகஸ்டில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கைசல் ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார்.