இடுக்கியில் ஆற்றில் கவிழ்ந்த கார்: ஒருவர் உயிரிழப்பு, 3 பேருக்கு காயம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் வெள்ளராடா பகுதியைச் சேர்ந்த எர்னஸ்ட் (38) இன்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் கட்டப்பனாவை நோக்கி பயணம் மேற்கொண்டார்.இடுக்கி மாவட்டத்தின் கரிந்தருவி பகுதியில் உள்ள கட்டப்பனா–குட்டிக்கானம் நெடுஞ்சாலையில் காலை சுமார் 6.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியது. பின்னர் சுமார் 60 அடி ஆழத்தில் ஓடும் சின்னார் ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விழுந்தது.இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அருகிலிருந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் பகுதியளவு மூழ்கியிருந்த காரிலிருந்து எர்னஸ்ட் உள்ளிட்ட ஐந்து பேரையும் அவர்கள் மீட்டு, பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், எர்னஸ்ட் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த திவ்யாஜோதி (29), நவ்யா ஜோதி (26), அஜின் (36) மற்றும் ஜோஹான் (5) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து தொடர்பாக உப்புத்தாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.