ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
ஆவின் பால் விநியோகம் தமிழகம் முழுவதும் குறைக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக சென்னை பெருநகரில் இன்று முதல் மேலும் 10 சதவீதம் வரை விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை தமிழக அரசு கடந்த வாரம் உயர்த்தியது. ஆனால், அதற்கேற்ப விற்பனை விலையை உயர்த்தாததால் ஆவின் நிறுவனத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் ஆவினுக்கு வரும் பால் அளவு அதிகரிக்கவில்லை என்றும், இதனால் அண்டை மாநில கூட்டுறவு நிறுவனமான நந்தினியிடம் இருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வடமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் வெண்ணெய் மற்றும் பால் பவுடரை பயன்படுத்தி பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் நிலையும் தொடர்வதாக தெரிவித்துள்ளார். இந்த நிதியிழப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க நிர்வாக ரீதியாக வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சில வாரங்களுக்கு முன்பே முழுமையாக நிறுத்தப்பட்டதாகவும், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆவின் பால் விநியோகம் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப பால் வழங்க முடியாமல் முகவர்கள் சிரமப்படுவதாகவும், குறைந்த வருவாயில் செயல்படும் பால் முகவர்கள் வாகன எரிபொருள், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பொன்னுசாமி கூறியுள்ளார். சென்னையில் மீண்டும் 10% விநியோகம் குறைப்பு சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பால் முகவர்களுக்கு வழங்கப்படும் ஆவின் பால் அளவு 25 சதவீதத்துக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (15.09.2026) முதல் சென்னை பெருநகரில் ஆவின் பால் விநியோகத்தை மேலும் 10 சதவீதம் வரை குறைக்க நிர்வாகத்தால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறைக்கு வந்துள்ளதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.