துஷ்யந்த், ஜனனி இணைந்து நடித்துள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மோகனா ஆர் தயாரித்துள்ளார். இதில் துஷ்யந்த் கதாநாயகனாகவும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஜனனி, இதற்கு முன்பு ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா ஆர், சத்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோரும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சரத் லோகித்ஷவா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோஷன் பஷீர், அருவி மதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். படத்திற்கு தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு மோகன் ராஜன், நிலவை பார்த்திபன் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர். படத்தின் கதை குறித்து இயக்குநர் மைதீன் கூறுகையில், தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதி பெரும்பாலும் வன்முறை, மோதல், கொலை, பகை உள்ளிட்ட அம்சங்களுடன் சித்தரிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். அதிலிருந்து மாறுபட்டு, அப்பகுதி மக்களின் இயல்பான வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் ‘ஆல் பாஸ்’ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வடசென்னையை மையமாகக் கொண்ட கதை என்பதால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் வடசென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.