20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்காக இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் வங்காளதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தரிந்து ரத்நாயகே பொறுப்புடன் விளையாடி அரைசதம் பதிவு செய்தார். கேப்டன் சஹான் அரச்சிகே 33 ரன்கள் சேர்த்தார்.
Advertisement
இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்கம் முதலே பின்னடைவு ஏற்பட்டது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் வங்காளதேச அணி 17.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.