ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் மற்றும் நேர விவரங்கள் பின்வருமாறு: வில்வித்தை: ரிகர்வ் ஆண்கள் தனிநபர் தொடக்க சுற்றில் நீரஜ் சவுகான், தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் அதிகாலை 5.30 மணிக்கு களம் காணுகின்றனர். ரிகர்வ் பெண்கள் தனிநபர் தொடக்க சுற்றில் கும்கும், கீர்த்தி ஆகியோர் காலை 9.45 மணிக்கு போட்டியிடுகின்றனர். டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் தஷினேஸ்வர் காலை 10 மணிக்கும், சுமித் நாகல் பிற்பகல் 12.30 மணிக்கும் விளையாடுகின்றனர். துப்பாக்கி சுடுதல்: டிராப் பெண்கள் தனிநபர் தகுதிச்சுற்று மற்றும் அணிகள் இறுதிப்போட்டியில் அவார் ரிஸ்வி, கைனென் செனாய், ஷபத் பரத்வாஜ் ஆகியோர் காலை 6.30 மணி முதல் பங்கேற்கின்றனர். இதே பிரிவில் நீரு, மனிஷா கீர், ஆஷிமா ஆசியாவத் ஆகியோரும் காலை 6.30 மணி முதல் களமிறங்குகின்றனர். ஸ்குவாஷ்: பெண்கள் லீக் சுற்றில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது. இப்போட்டி காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. குத்துச்சண்டை: பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், சீனாவின் லி ஷூவை காலை 10.15 மணிக்கு சந்திக்கிறார்.
Advertisement
ஆண்களுக்கான 80 கிலோ அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷ், உஸ்பெகிஸ்தானின் பஸ்லித்தின் எர்கின்போவை காலை 11 மணிக்கு எதிர்கொள்கிறார். 90 கிலோவுக்கு மேலான எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நரேந்தர், கஜகஸ்தானின் ஐபெக் ஓரல்பேவை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார். கைப்பந்து: ஆண்கள் லீக் சுற்றில் இந்திய அணி, கத்தாருடன் பிற்பகல் 12.30 மணிக்கு மோதுகிறது. தடகளம்: ஆண்களுக்கான போல்வால்ட் இறுதிப்போட்டியில் தேவ்குமார் மீனா, குல்தீப் குமார் ஆகியோர் பிற்பகல் 2.50 மணிக்கு பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பூஜா, சுப்ரியா பசவராஜூ ஆகியோர் மாலை 3.35 மணிக்கு களம் காண்கின்றனர். பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் அனுஷ்கா யாதவ், தன்யா சவுத்ரி ஆகியோர் மாலை 4.05 மணிக்கும், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் முகமது அப்சல் மாலை 4.35 மணிக்கும் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கவுதமி, பூஜா ஆகியோர் மாலை 4.20 மணிக்கும், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங், அவினாஷ் சாப்ளே ஆகியோர் மாலை 4.45 மணிக்கும் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் மாலை 5.35 மணிக்கு நடைபெறுகிறது.