அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலம்..!
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் ஆடி பெருந்திருவிழா கடந்த 21-ம் தேதி காலை மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவர் சுந்தரராஜ பெருமாள் என அழைக்கப்படும் கள்ளழகர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனிடையே, ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு இன்று மாலை அழகர்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சந்தனம் சாத்துப்படி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.இந்த சன்னதியின் திருநிலைக் கதவுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். இதனை காண ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.