பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் வினோத் (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 21-ம் தேதி மருத்துவமனையில் இருந்த ராஜேஸ்வரி மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பொன்னேரி அருகே மாதவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பது தெரியவந்தது.
Advertisement
ராஜேஸ்வரிக்கும் பிரகாஷுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும், அந்த உறவை ராஜேஸ்வரி முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த பிரகாஷ் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.