அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்
தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், 6 தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொறுப்பு அமைச்சர்களால் ஒரு தொகுதியின் அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக அறிந்து செயல்பட முடியாது என்றும், அந்த பணியை சிறப்பாக மேற்கொள்ள எம்.எல்.ஏ.க்கள் அவசியம் என்றும் கூறினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், அந்த தேர்தலில் தாங்களே வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளதால் அவற்றை நீக்குவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது அவரது மைக் அணைக்கப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும், குதிரை பேரம் தொடர்பான கருத்துகளை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்ற விவகாரம் குதிரை பேரம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அந்த வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர, அவர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்றார். மேலும், ஒரு கட்சியில் வெற்றி பெற்ற ஒருவர் எதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவை மரபை மீறி உரத்த குரலில் பேசியதால், சபாநாயகர் எழுந்து நின்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பொதுக்கூட்டம் அல்ல என்றும், சட்டசபையில் முறையாக பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் தான் எழுந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என ஆவேசமாக தெரிவித்தார்.பின்னர் சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும் என்றும், தன்னை வருத்திக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் தொடர்பான விவகாரம் சட்டசபையில் கடும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.