78 அடியை கடந்த மேட்டூர் அணை நீர்மட்டம்; நீர்வரத்து குறைந்தது
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பல அணைகள் முழு கொள்ளளவை நெருங்கின. இதையடுத்து, கடந்த 1-ந்தேதி முதல் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, தமிழகத்திற்கான நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.
கபினி அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு சற்று குறைந்ததால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.கபினி அணையின் முழு கொள்ளளவு நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,820 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,583 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கிருஷ்ண ராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.37 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 8,064 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக கால்வாய் மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,049 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அங்கு நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து கிடைத்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.034 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.மேட்டூர் அணையில் தற்போது 40.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந்தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. அப்போது 73.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், கடந்த 5 நாட்களில் 5 அடி உயர்ந்து 78 அடியை கடந்துள்ளது.