23-ம் தேதி 'ஜனநாயகன்' வெளியீடு: திருப்பூரில் உச்சம் தொட்ட விஜய் டி-ஷர்ட் தயாரிப்பு
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்', வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், திருப்பூரின் பின்னலாடைத் துறையும் பரபரப்பான வணிகச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து தற்போது தமிழக முதல்-அமைச்சராக உள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' படத்துக்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்காக சிறப்பு வடிவமைப்பில் டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணிகள் திருப்பூரில் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால், ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றும் வகையில் திருப்பூரில் செயல்படும் 700-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் கட்சியின் சின்னங்கள் இடம்பெற்ற பல்வேறு வடிவமைப்பிலான டி-ஷர்ட்கள் இரவு பகலாக தயாரிக்கப்படுகின்றன. அதிகரித்துள்ள தேவையை சமாளிக்க பல நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.தயாராகும் டி-ஷர்ட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவாகச் சென்றடைய அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலுக்குப் பிறகு வெள்ளித்திரையில் விஜய்யை காணும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் ரசிகர்கள் இந்த சிறப்பு டி-ஷர்ட்களை அணிய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த அதிகரித்த தேவை திருப்பூரின் பின்னலாடைத் தொழிலுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார ஊக்கத்தை வழங்கியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.