இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி நாளை புதுச்சேரியில் நடைபெறுகிறது. மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த 50 ஓவர் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ, 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் நாதன் மெக்ஸ்வீனி 123 ரன்களும், வில் சதர்லேண்ட் 77 ரன்களும் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4 விக்கெட்டுகளையும், யஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியால் 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
Advertisement
ராஜத் பட்டிதார் 53 ரன்கள் எடுத்து அணிக்காக போராடினார். ஆஸ்திரேலியா ஏ தரப்பில் மஹ்லி பியர்ட்மேன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஏ 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், சாய் சுதர்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், பிரியன்ஷ் ஆர்யா, நிஷாந்த் சிந்து, நமன் திர், அர்ஷின் குல்கர்னி, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்தியா ஏ அணி, நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.