Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு ஏற்புடையதல்ல - மாதர் சங்கம்

ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு ஏற்புடையதல்ல - மாதர் சங்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களையும் கண்டனங்களையும் அந்த அமைப்பு பதிவு செய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் மீது அக்கட்சியைச் சேர்ந்த பெண் முன்வைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தமிழகத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற புகார்களை அரசு அரசியல் சார்பின்றி அணுகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்தை மையமாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணையின் முடிவில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்ட இந்த விளக்கத்துக்கு முரணாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள தகவல்கள் இருப்பதாக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தனது புகாரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை காவல்துறையிடம் தெரிவித்தபோது, அவரது பெயரை புகாரில் சேர்க்கக்கூடாது என மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக கூறப்படும் விசாரணைக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை எங்கு நடைபெற்றது, யார் விசாரணை அதிகாரிகள் என்பதும் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படவில்லை என்றால், அந்த விசாரணை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. அவரது புகாரில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

Advertisement
அவரது வாக்குமூலம் பெறப்படாத நிலையில், புகாரின் உண்மைத் தன்மையை எந்த அடிப்படையில் மதிப்பிட்டார்கள் என்பதையும் அரசு விளக்க வேண்டும் என மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு பெண் தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கும்போது, அதில் எந்தவித தலையீடும் இருக்கக்கூடாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒரு சில அம்சங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளது. விஜி சரவணனுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு நடத்தப்பட்ட விசாரணை முழுமையானதாகவும், நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருந்ததா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர் அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதற்காக விசாரணையில் இருந்து விலக்கு அளிப்பதை ஏற்க முடியாது என மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முழுமையான நடைமுறையை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் எழுப்பியுள்ள கேள்விகளை முறையாக ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இன்றி உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் சமரசம், அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார அழுத்தம் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் மாதர் சங்கம் கூறியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் தரப்பை சாராமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் அரசு உறுதியாக நிற்க வேண்டும். அவர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உரிய மற்றும் வெளிப்படையான பதில்களை அளித்து, அவருக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு