டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
காவிரி பாசன பகுதிகளின் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். ஆரம்பத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு, கடந்த 3 நாட்களாக 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,075 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை கடந்து நேற்று காலை கல்லணையை வந்தடைந்தது. நீர்வரத்து குறைவாக இருந்ததால் நேற்று மாலை வரை கல்லணை முழுமையாக நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் மதகுகள் அருகே தண்ணீர் தேங்கி காணப்பட்டது.இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இதற்கான விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், வினோத், ரமேஷ், ஷாஜகான், முகமது பர்வேஸ், ராஜ்குமார் ஆகிய 6 பேர் பங்கேற்கின்றனர்.