Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

‘வெற்றி வீடு கட்டும் திட்டம்’: முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு ஒப்புதல்

‘வெற்றி வீடு கட்டும் திட்டம்’: முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு ஒப்புதல்

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் கட்டித் தரும் வகையில், ‘வெற்றி வீடு கட்டும் திட்டத்தின்’ முதற்கட்டப் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2026-27-ம் நிதியாண்டில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘வெற்றி தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு மொத்தம் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, 2026-27-ம் நிதியாண்டில் 70,000 வீடுகளைக் கட்ட ‘வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சமையலறையுடன் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடுகளைக் கட்டிக்கொள்ளலாம். அனைத்து வீடுகளும் கான்கிரீட் மேற்கூரையுடன் அமைக்கப்பட வேண்டும். குடிசை வீடுகள், மண் சுவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற மேற்கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு பயனாளிகள் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக கிராமப்புறங்களில் மொபைல் செயலி வாயிலாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் தற்காலிகப் பயனாளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இறுதிப் பட்டியல் ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதேநேரத்தில், முதல் கட்டமாகக் கட்டப்படவுள்ள 70 ஆயிரம் வீடுகளுக்கான பயனாளிகளை, ஊரக வளர்ச்சித் துறையிடம் ஏற்கெனவே பராமரிக்கப்பட்டு வரும் வீடற்றோர் பட்டியலில் இருந்தும் தேர்வு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வீடு கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள், பயனாளிகளின் விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.

Advertisement
கூடுதல் பணம் தேவைப்படும் பயனாளிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் வரை 6 சதவீத வட்டியில் சமூக முதலீட்டு நிதிக் கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூட்டுறவு வங்கிகள் அல்லது வணிக வங்கிகள் வாயிலாக ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அரசு வழங்கும். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும். தனிநபர் கழிப்பறை வசதி இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு, தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த வீடுகளில் 5 சதவீதம், மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும். இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணக்கெடுப்பின்போது விடுபட்ட தகுதியான நபர்களுக்கு இந்த ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,600 கோடியும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரூ.900 கோடியை மாதாந்திரத் தவணைகளாகப் பிடித்தம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-27-ம் ஆண்டு முதல் 2030-31-ம் ஆண்டு வரை இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் செலவிடப்படுவதையும், கட்டப்படும் வீடுகளின் தரம் உறுதி செய்யப்படுவதையும் கண்காணிக்க வேண்டும் என்றும், திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு