‘வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றுங்கள்’ – பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டான 2022-ம் ஆண்டு முதல் ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த ஆண்டுக்கான ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கம் நேற்று தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை இந்த இயக்கம் நடைபெற உள்ளது.இதையொட்டி பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் மூவர்ணக்கொடி நாட்டின் பெருமையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்காக சிறப்பான பங்களிப்பை வழங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும் சக்தியாக தேசியக் கொடி விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கத்தில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பங்களிப்பை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.