விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் மார்க்கண்டேயனை கடந்த 20-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்நெல்லைபாளையங்கோட்டைமத்தியசிறையில்அடைக்கப்பட்டார்.இதையடுத்து, ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த முதல் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி நிராகரித்தது. பின்னர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் கடந்த 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டது.இதன் பின்னர், முதல்-அமைச்சர் விஜயை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் இருந்த மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்ததுடன், சட்டமன்றம் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் மார்க்கண்டேயன் பேசியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.