விபத்து நடந்த இடத்தை 10 நிமிடத்தில் அடைய வேண்டும்: ஆம்புலன்ஸ்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய கட்டுப்பாடு
சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் தாமதமாகச் செல்வது குறித்து பல்வேறு தரப்பில் தொடர்ந்து கவலைகள் எழுந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் விபத்து நடந்த இடத்தை ஆம்புலன்ஸ் அடைய வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்றக் குழுவும், தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும், விபத்து நடந்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் செல்லாதது குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தன.இதையடுத்து, அவசரகால சேவைகளில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, விபத்து நடந்த இடம் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் அங்கு சென்றடைய வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடையத் தவறினால், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விபத்து நடந்த இடம் 10 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தால், தூரத்துக்கு ஏற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்.ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவிகளின் உதவியுடன் சேவையின் நேரம் கண்காணிக்கப்படும். மேலும், விபத்து தொடர்பான அழைப்பைப் பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.அவசர உதவி அழைப்புகளை புறக்கணிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் இதே அளவிலான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் தற்போது சுமார் 3 ஆயிரம் ஆம்புலன்ஸ்கள், ஆயிரம் ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் பிரத்யேக சிம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்காக மத்திய அரசு '1033' என்ற உதவி மைய எண்ணையும் அறிவித்துள்ளது.