வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா? – தஞ்சை போலீஸ் விளக்கம்
தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் 26 வயது ஆகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி, ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் தொடர்ந்து ஹாரன் அடித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு ஆகாஷை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், அப்போது அவர் போலீசாரிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.வாக்குவாதம் தொடர்ந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை ரஹீம் பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு ஆகாஷ் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் பெண் ஒருவரை தாக்கியதாக கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணியாற்றிய இடத்தில் மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இதனால், போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு மாறானது என தஞ்சாவூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கும் ஆகாஷுக்கும் இடையிலான வாக்குவாதம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவம்
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி அந்த பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் அமர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேனர் மீண்டும் வைக்கப்பட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் தெரிவித்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வழிவிடுமாறு கூறியதால், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷும் வழிவிடுமாறு கேட்டபோது அவருக்கும் விசிகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஆகாஷை சமாதானப்படுத்த முயன்றனர். தான் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும், வேலைக்குச் செல்லவில்லை என்றால் தனது சம்பளத்தை யார் வழங்குவார்கள் என்றும் அவர் போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், போலீசாருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் ஆகாஷை தாக்கியதாகவும், அதற்கு பதிலாக ஆகாஷ் ரஹீமின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து போலீசார் ஆகாஷை பிடித்து ஜீப்பில் ஏற்றி மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் ஆகாஷும் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனிடையே, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்ததாக ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.