வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் பிரமாண்டமாக விளங்கிய இந்த ஆலயம், காலப்போக்கில் சுருங்கி தற்போது எளிய தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆலயத்தை புனரமைக்கும் பணியின்போது சிறிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், கி.பி.1018 முதல் 1054 வரை ஆட்சி செய்த ராஜாதி ராஜன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகவும், பின்னர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் புனரமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் கட்டிட அமைப்பு, பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் மற்றும் தெய்வச் சிற்பங்களின் கலைநயத்தை ஆய்வு செய்ததில், நந்தியம் பெருமான், பசுபதீஸ்வரர், லோகநாயகி ஆகியோரின் திருவுருவங்கள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில், கருவறை கோஷ்டத்தில் உள்ள தெய்வ வடிவங்கள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது. ஆலயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் வழக்கமான நிறத்தில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகின்றன. இவை செங்காந்தக் கற்கள் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன. திட்டக்குடி சிவாலயம், விஷ்ணு கோவில்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிற ஆலயங்களிலும் இதுபோன்ற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. நந்தி மண்டபம் முதல் பசுபதீஸ்வரர் சன்னிதி வரை வையங்குடி கிராமத்தின் மையப் பகுதியில் கிழக்கு நோக்கிய எளிய நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்குள் சென்றதும் நந்தி மண்டபத்தில் இறைவனை நோக்கியபடி நந்திதேவர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசித்த பிறகு பசுபதீஸ்வரர் சன்னிதியை அடையலாம். அங்கு அம்மையப்பனின் சுதைச் சிற்பங்கள் கிழக்கு திசையை நோக்கியவாறு அமைந்துள்ளன. ஐந்து படிகளை கடந்து சென்றால் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தை காணலாம். இங்கு பழமையான கணபதி சிலையும், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கருவறையில் பசுபதீஸ்வரர் ஒளிமயமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் சூரியக் கதிர்கள் நேரடியாக சுவாமி மீது விழுவது ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். கருவறையின் வெளிப்புறச் சுற்றில் ஐந்து கோஷ்டங்கள் அமைந்துள்ளன.