வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில்

வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் பிரமாண்டமாக விளங்கிய இந்த ஆலயம், காலப்போக்கில் சுருங்கி தற்போது எளிய தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆலயத்தை புனரமைக்கும் பணியின்போது சிறிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், கி.பி.1018 முதல் 1054 வரை ஆட்சி செய்த ராஜாதி ராஜன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகவும், பின்னர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் புனரமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் கட்டிட அமைப்பு, பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் மற்றும் தெய்வச் சிற்பங்களின் கலைநயத்தை ஆய்வு செய்ததில், நந்தியம் பெருமான், பசுபதீஸ்வரர், லோகநாயகி ஆகியோரின் திருவுருவங்கள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில், கருவறை கோஷ்டத்தில் உள்ள தெய்வ வடிவங்கள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது. ஆலயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் வழக்கமான நிறத்தில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகின்றன. இவை செங்காந்தக் கற்கள் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன. திட்டக்குடி சிவாலயம், விஷ்ணு கோவில்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிற ஆலயங்களிலும் இதுபோன்ற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. நந்தி மண்டபம் முதல் பசுபதீஸ்வரர் சன்னிதி வரை வையங்குடி கிராமத்தின் மையப் பகுதியில் கிழக்கு நோக்கிய எளிய நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்குள் சென்றதும் நந்தி மண்டபத்தில் இறைவனை நோக்கியபடி நந்திதேவர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசித்த பிறகு பசுபதீஸ்வரர் சன்னிதியை அடையலாம். அங்கு அம்மையப்பனின் சுதைச் சிற்பங்கள் கிழக்கு திசையை நோக்கியவாறு அமைந்துள்ளன. ஐந்து படிகளை கடந்து சென்றால் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தை காணலாம். இங்கு பழமையான கணபதி சிலையும், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கருவறையில் பசுபதீஸ்வரர் ஒளிமயமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் சூரியக் கதிர்கள் நேரடியாக சுவாமி மீது விழுவது ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். கருவறையின் வெளிப்புறச் சுற்றில் ஐந்து கோஷ்டங்கள் அமைந்துள்ளன. அவற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துர்க்கைக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. கருவறை விமானத்தின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும் காட்சியளிக்கின்றனர். விமானத்தின் நான்கு புறங்களிலும் அமர்ந்த நிலையில் நந்தியின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் லோகநாயகி ஆலயத்தின் வலப்புறச் சுற்றில் அன்னை லோகநாயகியின் சன்னிதி அமைந்துள்ளது. ஐந்து படிகளை கடந்து உள்ளே சென்றால் கருவறைக்கு முன்பாக மண்டபம் உள்ளது. கருவறையில் லோகநாயகி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளையும் தாங்கியுள்ளார். அன்னையின் கருவறை விமானத்தின் நான்கு திசைகளிலும் அம்மன் வடிவங்களும், சிங்க வாகனங்களும் வண்ணச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் சுற்றுப்பகுதி முகப்பில் பக்தர்கள் முற்றோதல் செய்வதற்காக தகடு கூரையுடன் கூடிய மண்டபமும் அமைந்துள்ளது. திருமண வேண்டுதலுக்கான சிறப்பு தலம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட வேண்டுதல்களுக்கும் இந்த ஆலயம் சிறந்த பிரார்த்தனைத் தலமாக பக்தர்களால் கருதப்படுகிறது. மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், நவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. குறிப்பாக ஆவணி சுவாதி நாளில் மாலை நடைபெறும் திருமண உற்சவம் முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த உற்சவத்தில் பங்கேற்று வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு ஓராண்டுக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலை அடையும் வழி வையங்குடி திருத்தலம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. திட்டக்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ., பெண்ணாடத்தில் இருந்து 13 கி.மீ., விருத்தாசலத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது. கடலூர் - திருச்சி வழித்தடத்தில் ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வடக்கு திசையில் சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் வையங்குடி பசுபதீஸ்வரர் கோவிலை சென்றடையலாம்.