மும்பையை ஒட்டியுள்ள தானே மாவட்டத்தில், ரூ.5.25 கோடி மதிப்பிலான நல்லபாம்பு விஷத்தை கடத்த முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியில் உள்ள டோடியா பெட்ரோல் பங்க் அருகே வனவிலங்கு கடத்தல் கும்பல் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த முகமது டேனிஷ் பயிம் கான் (23), அப்துல் கரீம் ரஷீத் அகமது ஷேக் (51) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு கண்ணாடி குப்பிகளில் முறையே 250 மில்லி கிராம் மற்றும் 260 மில்லி கிராம் அளவிலான நல்லபாம்பு விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த பைசான் அப்துல் அஜீஸ் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மும்பை மான்கூர்டு டிராம்பே பகுதியைச் சேர்ந்த முக்கிய விநியோகஸ்தர்களான பாரூக் அலி அப்துல் அலி (37), நூர் முகமது வாலி முகமது ஷேக் (47) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக காஷிகாவ் போலீசார் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.