ரூ.40 லட்சம் லஞ்சப் புகார்: சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற அதிகாரியாக அறியப்படுகிறார். இந்நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை பணம் பெற்றதாக புகாரி மீது புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், புகாரி பரங்கிமலை காவல் நிலையப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.பின்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயரதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பணம் பெற்றது உறுதியானதாக கூறப்படுவதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.இதையடுத்து, நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் புகாரி கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக தனது பணியைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.