ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி: சிறையில் கைதான வழக்கறிஞர் உயிரிழப்பு
பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்தார்.பழனி அடிவாரப் பகுதியில் உள்ள இந்த நிலம், கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனிநபர்களுக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) மற்றும் அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரை 21-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.ஜஸ்டின் மணிகண்டனுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.மறுபுறம், ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி மற்றும் அன்வர்தீன் தரப்பில் ஜாமீன் கோரி திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனைத் தொடர்ந்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.