மோடி அரசு மாணவர்களை தேசத்தின் எதிரிகள் போல நடத்துகிறது - சோனியா காந்தி குற்றச்சாட்டு
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கும், 'நீட்' தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி நடத்தினர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். பேரணியை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளையும் பயன்படுத்தினர். இதற்கு பதிலாக சிலர் போலீசார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது.போலீசாரின் தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்து, நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அரசியல் விவாதத்தை கிளப்பியதுடன், பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில், தற்போதைய கல்விச் சூழலில் நிலவும் நம்பிக்கையின்மையும், மத்திய அரசின் ஆணவமான மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறையும் மாணவர் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் கல்வி அமைப்பு பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசின் செயல்பாடுகளை மாணவர்களே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கடமை என்றும், அவர்கள் கல்வி சீர்திருத்தங்களையும் பொறுப்புக்கூறலையும் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அரசு அடக்குமுறையை கையாள்ந்து, மாணவர்களை எதிர்கால தலைமுறையாக அல்லாமல், தேசத்தின் எதிரிகளாக நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.2020-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு போராட்டங்களின்போது பல்கலைக்கழக வளாகங்களில் நடந்த போலீஸ் நடவடிக்கைகளையும், பெண் மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொண்ட சம்பவங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒப்புதல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
மாணவர் போராட்டங்கள் குறித்து அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாட்டின் இளைஞர்கள் என்பதை உணர வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பல தரப்பினரிடமும் அரசு அடக்குமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், தற்போது மாணவர்கள்மீதும் அதே போக்கு தொடர்வதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கால மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோர்களாக உருவாகவிருக்கும் இளைஞர்களை புரிதலுடன் அணுகாமல், அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகத்தில் செயல்படுவதாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 'நீட்' பயிற்சிக்காக குடும்பங்கள் செலவிடும் மொத்த தொகை, பொது கல்விக்காக மத்திய அரசு முதலீடு செய்யும் தொகைக்கு சமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை (NTA) போதுமான பணியாளர்கள் இல்லாத பலவீனமான அமைப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேர்வுகளை நடத்த தனியார் ஒப்பந்த நிறுவனங்களை அதிகமாக நம்பியிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்படும் வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நிபுணர்களில் பலர் முன்னணி கல்வியாளர்கள் அல்ல என்றும், அரசியல் தொடர்புகளைக் கொண்ட சாதாரண தகுதியுடையவர்களே அதிகம் இடம்பெறுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், 2017-ஆம் ஆண்டு NTA உருவாக்கப்பட்ட பிறகு மட்டும் 9 முறை வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு பரிந்துரைத்த NTA சீர்திருத்தங்களை, அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்த காரணத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிராகரித்ததாகவும், இத்தகைய தோல்விகளுக்குப் பிறகும் அவர் பதவி விலக மறுப்பது மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தனது கட்டுரையில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.