மேகதாது அணைக்காக 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடகா திட்டம்
பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 67.14 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மேகதாது திட்டத்துக்கான முதற்கட்ட திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனை ஆய்வு செய்த ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.அதன்படி, 2019-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அவற்றை திருத்தி மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியது.இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதில் உள்ள தகவல்கள் காவிரி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக கூறி, ஜூன் 29-ம் தேதி அந்த அறிக்கையை மத்திய நீர் ஆணையம் கர்நாடக அரசுக்கே திருப்பி அனுப்பியது.தற்போது அந்த அறிக்கையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்ட கர்நாடக அரசு, புதிய அறிக்கையை மீண்டும் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.புதிய அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்காக வனத்துறைக்கு சொந்தமான 12,500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.