முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
சென்னையில் 2025 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.இதையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொன்முடி ஆற்றியதாக கூறப்படும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக விசாரணை நடத்தி, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மத அடிப்படையில் வெறுப்பைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.பின்னர், இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.இந்த வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.
இளந்திரையன், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, வழக்கு நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் மீதான தடை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அதே நேரத்தில், பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆஜராக விலக்கு கோரும் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தது.இந்த நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.