“முதல்-அமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” - டிடிவி தினகரன்
மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்ற முதல்-அமைச்சர் திரும்பிவிட்ட நிலையில், அவர் ஈர்த்ததாக கூறப்படும் முதலீடுகள் எப்போது தமிழகத்துக்கு வரும்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்ட அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் பயணிகள் விமானத்தில் பொதுமக்களுடன் பயணம் செய்து, பெருமளவு முதலீடுகளை ஈர்த்து வருவதாக தவெகவினர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளுக்கும், வெளிநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டிய நிலையில், மோட்டார் வாகனப் பந்தயத்தை தொடங்கி வைத்தது, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் பயணம் உண்மையில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய்யின் ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தில், செப்டம்பர் 14-ஆம் தேதி மட்டும் முதலீட்டாளர்களை சந்தித்ததாகவும், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை சந்தித்த ஒருநாளைத் தவிர்த்து, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதல்-அமைச்சர் யாரையெல்லாம் சந்தித்தார்? தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்பது குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தாலும், அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.