வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இளைஞர்கள் வேலை தேடுவது ஆடம்பரத்திற்காக அல்ல என்றும், குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவும், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தவும், சொந்த வாழ்க்கையை உருவாக்கவும் வேலை தேடுவதாகவும் தெரிவித்துள்ளார். வேலை தேடுபவர்களையும் நிறுவனங்களையும் இணைக்கும் ஆட்சேர்ப்பு, பணியாளர் தேடல், வேலைவாய்ப்பு பரிந்துரை மற்றும் தொழிலாளர் வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. விதிகளின்படி, பணியாளர்களைத் தேடுதல், வேலைவாய்ப்புக்குப் பரிந்துரைத்தல், தொழிலாளர்களை வழங்குதல் போன்ற சேவைகள் தனித்தனி பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தரப் பணியமர்த்தல், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் வழங்கல் மற்றும் தற்காலிக பணியாளர் சேவைகளும் இதில் அடங்குகின்றன. மேலும், ஜி.எஸ்.டி. வரி விகித அட்டவணையில் 9985 என்ற வகைப்பாட்டின் கீழ் உள்ள பொதுவான ஆதரவுச் சேவைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். வேலை தேடுபவர்களையும் வேலை வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுவதால், அது வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
வேலைவாய்ப்பு உருவாக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், வேலை தேடும் இளைஞர்களையும் நிறுவனங்களையும் இணைக்கும் அமைப்புகள் தடையின்றி செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய சூழலில், அந்த வாய்ப்புகளைத் தேடும் செயல்முறையிலும் செலவுகள் அதிகரிப்பது எந்த வகையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர்களுக்கு கல்விச் சான்றிதழ்கள் மட்டுமே போதாது என்றும், வேலை, நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவை தேவை என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் எதிர்காலப் பயணத்தில் தேவையற்ற செலவுகள் தடையாக அமையாத வகையில், வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வேலை தேடும் தலைமுறையின் சுமையை அதிகரிப்பதற்குப் பதிலாக, வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் கைகளில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்குப் பதிலாக பணிநியமன ஆணைகள் கிடைக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்து, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஏற்ற வரிச்சூழலை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.