மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்ற முதல்-அமைச்சர் திரும்பிவிட்ட நிலையில், அவர் ஈர்த்ததாக கூறப்படும் முதலீடுகள் எப்போது தமிழகத்துக்கு வரும்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்ட அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் பயணிகள் விமானத்தில் பொதுமக்களுடன் பயணம் செய்து, பெருமளவு முதலீடுகளை ஈர்த்து வருவதாக தவெகவினர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளுக்கும், வெளிநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டிய நிலையில், மோட்டார் வாகனப் பந்தயத்தை தொடங்கி வைத்தது, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் பயணம் உண்மையில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய்யின் ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தில், செப்டம்பர் 14-ஆம் தேதி மட்டும் முதலீட்டாளர்களை சந்தித்ததாகவும், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை சந்தித்த ஒருநாளைத் தவிர்த்து, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதல்-அமைச்சர் யாரையெல்லாம் சந்தித்தார்? தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்பது குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தாலும், அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. இதனால் அந்த முதலீடு உண்மையில் தமிழகத்துக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும், செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முக்கிய திட்டங்கள் மற்றும் அரசு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம், பயிர்க்கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகளின் போராட்டம், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், அறிவிக்கப்படாத மின்வெட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு, ஆவின் பால் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை கருத்தில் கொள்ளாமல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி லண்டன் சென்று திரும்பியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு எதிராக மக்கள் கேள்வி எழுப்பும் நேரங்களில் பழைய சம்பவங்களை மாற்றிக் கூறி சர்ச்சைகளை உருவாக்குவதுடன், சோதனை, ரெய்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மக்கள் பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விமர்சனங்களிலிருந்து கவனத்தை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு விவகாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறி வரும் தவெக அரசு, இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்தும் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். பயணத்தின் ஒவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் சந்தித்த முதலீட்டாளர்கள் யார், அதன் மூலம் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, அதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும், அவை எத்தனை நாட்களில் நடைமுறைக்கு வரும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாக, “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் திரும்பிவிட்டார்; அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்பதே முதல்-அமைச்சரிடம் தாங்கள் கேட்கும் கேள்வி என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.