தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுடன் உணவகங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் அரசுக்கு தினசரி ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இதனிடையே, டாஸ்மாக் கடைகளுடன் செயல்படும் பல பார்களில் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதையடுத்து, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடத்தப்பட்ட கல்விக் கடன் முகாம், பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பார்களில் உணவகங்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் மதுபான நிறுவனங்களிடம் இருந்து மதுபானம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதுபோன்ற நடைமுறைகளை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். அரசு பொறுப்பேற்று 120 நாட்களே ஆகியுள்ள நிலையில், இன்னும் 1,400-க்கும் மேற்பட்ட நாட்கள் ஆட்சி செய்ய வேண்டியுள்ளது என்றும், இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
Advertisement
டாஸ்மாக் துறை வருவாய் ஈட்டுவதற்கான ஒரு துறையாக மட்டுமே கடந்த காலங்களில் அணுகப்பட்டதாகவும், அந்த அணுகுமுறையை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் நோக்கம் வெறும் தரத்தை உயர்த்துவது மட்டுமல்ல; போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். கோவையில் உள்ள FL2 பார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், விதிமீறல் கண்டறியப்படும் பார்களுக்கு முதலில் 30 நாட்கள், 60 நாட்கள் என இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். டாஸ்மாக் கடைகள் மற்றும் FL2 பார்களை முறைப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெறும் காலத்திலேயே இந்த விவகாரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். டாஸ்மாக் பார்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, புதிய டாஸ்மாக் பார் டெண்டர் ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும், அதில் உணவகங்களையும் நடத்திக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறினார். உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் விளக்கினார். மேலும், தமிழக முதல்-அமைச்சர் விரைவில் கோவைக்கு வருகை தர உள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.