Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

முதல்-அமைச்சர் ஆய்வு செய்தும் தொடரும் காவல் மரணங்கள்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

முதல்-அமைச்சர் ஆய்வு செய்தும் தொடரும் காவல் மரணங்கள்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

முதல்-அமைச்சர் விஜய் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகும் காவல் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்துக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பாலகிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநர், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், முதல்-அமைச்சர் விஜய் காவல் நிலையங்களில் ஆய்வு நடத்திய பின்னரும் காவல் மரணங்கள் நிகழ்வது கடும் கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புகார் அளிக்கச் சென்ற பாலகிருஷ்ணனை இரவு நேரத்தில் சட்டவிரோதமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஏன் என்றும், அவர் காவல் நிலையக் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த முடிவை எடுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடி கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்களிடம் காண்பிக்காமலேயே அவசரமாகப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டுவதாகவும், இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரைத் தாக்கி கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட உதயநிதி, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலகிருஷ்ணனுக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படவில்லை எனப் புகார் அளிக்கச் சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே தீக்குளித்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது துறையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்காமல், வெறும் வசனங்களைப் பேசி ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர், மோசமான நிலையில் இருக்கும் சட்டம்-ஒழுங்கை எப்போது சீரமைக்கப் போகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு