Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ரெயில் பாதை கட்டுமானத்தில் ரூ.4 கோடி முறைகேடு? ஓய்வுபெற்ற 2 ரெயில்வே பொறியாளர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

ரெயில் பாதை கட்டுமானத்தில் ரூ.4 கோடி முறைகேடு? ஓய்வுபெற்ற 2 ரெயில்வே பொறியாளர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

தமிழகத்தில் புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மதுரை - தூத்துக்குடி ரெயில் வழித்தடத்தில், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் - மேலமருதூர் இடையே 17.75 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.120.70 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்தப் பணிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட 2 பால்கள்: முதல் வழக்கின்படி, குறிப்பிட்ட ரெயில் பாதையில் ஒரு பாலம் அமைக்க மட்டுமே ரெயில்வே வாரியம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக கூடுதலாக இரண்டு சிறிய பாலங்கள் கட்டப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. இந்தப் பாலங்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம், தேவையான முன் அனுமதிகளைப் பெறாமல், சின்னா ரெட்டிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதிக்குள் ரூ.3.59 கோடி செலவில் இரண்டு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒரே நீர்வழியில் சுமார் 30 மீட்டர் இடைவெளியில் இந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டையும் ஒரே பாலமாகக் கட்டியிருக்க முடியும் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட உயரத்தைவிட சுமார் 4 மீட்டர் கூடுதலாகப் பாலங்கள் கட்டப்பட்டதால், மண் நிரப்புதல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் ரெயில்வே வாரியத்திற்கு ரூ.2.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement
பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி, அவற்றின் கட்டுமானத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற கட்டுமானத்தைச் சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் மதுரை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ரெயில்வே பொறியாளர் முகமது சாலய்யா மற்றும் சின்னா ரெட்டி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். கான்கிரீட் தடுப்புச் சுவரால் ரூ.1.44 கோடி இழப்பு: இரண்டாவது வழக்கில், ஓய்வுபெற்ற பொறியாளர்களான முகமது சாலய்யா, வில்லியம் ஜெய் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டில், மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து, ரெயில்வேயின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்த இரு பொறியாளர்கள் மீதும் சி.பி.ஐ. புகார் பதிவு செய்துள்ளது. பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக முதலில் சுவர் எழுப்பப்பட்டதால், பாலங்களுக்குச் செல்லும் அணுகுசாலைகளில் மண் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள போதிய இடவசதி இல்லாமல் போனதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தடுப்புச் சுவர் மண்ணுக்குள் புதையும் நிலை ஏற்பட்டதுடன், ரெயில்வே வாரியத்திற்கு ரூ.1.44 கோடி நிதியிழப்பு ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு தனித்தனி வழக்குகளிலும் சேர்த்து, ரெயில்வே வாரியத்திற்கு சுமார் ரூ.4 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஓய்வுபெற்ற இரண்டு ரெயில்வே பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு