முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர மாநிலப் பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் கோதாவரி–காவிரி நதிகள் இணைப்பு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்தித்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் போதிய விவரங்கள் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலப் பயணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் அதில் பங்கேற்பது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், விஜய் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு தொடர்பாக வெளியான குழுப் புகைப்படத்தில் தமிழக நீர்வளத் துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெறவில்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் விஜய்யின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி முக்கிய இடத்தில் அமர்ந்திருந்தார். நீர்வளத் துறைச் செயலாளருக்கு பதிலாக விஷ்ணு ரெட்டிக்கு அங்கு என்ன பணி என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார் மேலும், விஜய் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு ரூ.4.42 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாகவும், அவை தொடர்பாகப் பேசுவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக அதிகாரிகள் தயாரித்த அறிக்கையை முதலமைச்சர் விஜய் கூட்டத்தில் வாசிக்காதது ஏன் என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு அறிக்கை வாசிக்கப்பட்டிருந்தால் அதற்கான காணொளி வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கோதாவரி–காவிரி நதிகள் இணைப்பு தொடர்பான கடிதத்தை சந்திரபாபு நாயுடுவிடம் நேரில் வழங்குவதற்காக விஜய் ஆந்திராவுக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார். அந்தக் கடிதத்தைத் தமிழகத்திலிருந்தே அனுப்பியிருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரப் பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, பாலாறு வடிநிலக் கோட்டக் கண்காணிப்புப் பொறியாளர், கிருஷ்ணா நீர் வழங்கும் பிரிவின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட ஏழு தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் விஜயவாடாவுக்குச் சென்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடி ஆந்திர முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவில்லை என்றும், இதனால் தமிழக அதிகாரிகள் எந்தப் பயனும் இன்றி திரும்பியதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார். ஆந்திராவின் சிறப்பு உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, திருப்பதியில் சிறப்பு தரிசனத்தையும் முடித்துக்கொண்டு அதிகாரிகள் திரும்பியதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டதா, சாத்தியக்கூறு அறிக்கை உருவாக்க முடிவு செய்யப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்பது குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் ஏதேனும் முடிவெடுத்தார்களா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலப் பிரச்சினைகள் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறிவிட்டு, விஜய் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் துரைமுருகன் விமர்சித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்வதாகக் கூறிய அவர், அங்கு கார் பந்தயத்தில் பங்கேற்றதாகவும், ஐந்து நாட்கள் கொண்ட அந்தப் பயணத்தில் மூன்று நாட்கள் என்ன செய்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா, கேரளம் எனப் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, தனிப்பட்ட பயணங்களுக்குக் கூட மாநில நலன் என்ற பெயர் சூட்டப்படுவதாகவும், முதலமைச்சர் தனி விமானத்திலேயே பயணம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் மக்களுக்கு முழுமையாக வெளிப்படையாக இருக்கும் என்றும், எந்தத் திட்டமும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியமாக விவாதிக்கப்படாது என்றும் முதலமைச்சராகப் பதவியேற்றபோது விஜய் தெரிவித்திருந்ததை துரைமுருகன் நினைவுபடுத்தியுள்ளார். வெளிப்படைத்தன்மை குறித்து தொடர்ந்து பேசும் முதலமைச்சர், தனது பயணங்கள் தொடர்பான விவரங்களை ஏன் மக்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசுப் பணத்தில் பயணம் மேற்கொண்டு, அரசு சார்ந்த பணிகளைச் செய்ததாகக் கூறும் முதலமைச்சர், உண்மையில் என்ன பணிகளை மேற்கொண்டார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற மனப்பான்மையுடன் செயல்படுவது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், தனது செயல்பாடுகள் குறித்த விவரங்களை வாக்களித்த மக்களிடம் வெளிப்படுத்த வேண்டியது அவரது தார்மீகக் கடமை என்றும் கூறியுள்ளார். விஜய்யின் அரசு முறைப் பயணங்களில் வழக்கமான நடைமுறைகள் வெளிப்படையாக மீறப்படுவதாகவும் துரைமுருகன் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.