மீண்டும் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு: பொதுக்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக ச. வடிவேல் இராவணனும், பொருளாளராக ம. திலகபாமாவும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தனர்.பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும் வடிவேல் இராவணன், திலகபாமா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழுவில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஓராண்டுக்கு நீட்டித்திருந்தது. அந்த நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, கட்சி அமைப்பு விதிகளின்படி புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மாவட்டம், ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அமைப்புத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. மாநில அளவிலான பதவிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு திலகபாமா ஆகியோர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால், அவர்கள் மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் அமைப்புத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.பொதுக்குழு கூட்டத்தில், அவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், கட்சிப் பணிகளில் சிறந்து செயல்பட வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு ஜூலை 25 முதல் நவம்பர் 9 வரை 109 நாட்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட "தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்" ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்ததாக பொதுக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் அலை பா.ம.க. வலுவாக உள்ள மாவட்டங்களில் தாக்கம் ஏற்படுத்தாமல் தடுக்கப்பட்டதற்கு அன்புமணியின் முயற்சியே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக அவர் மேற்கொண்ட நான்கு நாள் விழிப்புணர்வு பயணத்துக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதை அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையை பொதுக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி மற்றும் அரசியல் பணிகளை பொதுக்குழு பாராட்டி, அவரது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தேசிய அளவில் இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமச்சீர் கல்வி, மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளில் அவர் செய்த பணிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என அறிவித்த முதலமைச்சர் விஜய் மற்றும் அதற்காக வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும், மத்திய அரசின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்மானங்களில் இடம்பெற்றுள்ளன.தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வள கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பி, அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி. பிரதிநிதியை சேர்க்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க. தயாராக வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றியதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும், ஓ.பி.சி. உள்இடஒதுக்கீடு தொடர்பான ரோகிணி ஆணைய பரிந்துரைகளை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில் புதுச்சேரியின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்மானங்களில் இடம்பெற்றுள்ளன.மேலும், பா.ம.க. கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக சென்னை அடையாறைச் சேர்ந்த பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நிறுவனத்தை புதிய தணிக்கையாளராக நியமித்ததற்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது.