மதுரை மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்ததால், அதன் சீரமைப்பு பணிகள் காரணமாக கும்பாபிஷேகம் தாமதமானது. தற்போது வீரவசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 30-ம் தேதி மண்டபம் திறக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே, ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கு ஆடி வீதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 8-ம் கால யாக பூஜையும், மாலை 9-ம் கால யாக பூஜையும் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு 10-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. பல்வேறு வேள்வி பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, காலை 5 மணியளவில் பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
அதன்பின்னர், டங்கா மாடு, யானை மற்றும் மேளதாளங்கள் முழங்க புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டன. அவை அனைத்து பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள் மற்றும் சன்னதி கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேக நாளான நாளை அதிகாலை 4 மணியளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 5.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோவில் மற்றும் மதுரை நகரில் விரிவான ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை, போடி, ராமேசுவரம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. இதனால் தூங்காநகரமான மதுரை முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.