மது பாட்டிலுக்கு ரூ.20 வரை கூடுதல் வரியா? சட்டசபையில் மசோதா தாக்கல்
தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற புதிய வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயை மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானங்களை பயன்படுத்திய பிறகு காலியாகும் பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் அதிகபட்சமாக ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2006-ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் வணிகர்களே இந்த தீர்வை வரியை செலுத்துவதற்கு பொறுப்பானவர்களாக இருப்பார்கள். மதுபானத்தின் வகை, அதன் அளவு மற்றும் மதுபானம் அடைக்கப்பட்டுள்ள கொள்கலன் அல்லது பாட்டிலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு கட்டண விகிதங்களை நிர்ணயிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வரியின் மூலம் கிடைக்கும் நிதியை பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.
குறிப்பாக, காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்து முறையாக அப்புறப்படுத்துதல் மற்றும் அவற்றை மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.மேலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்புத் திட்டங்களை செயல்படுத்தவும், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளவும் இந்த வருவாய் பயன்படுத்தப்பட உள்ளது.மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும். அதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் இந்த நிதியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நோக்கங்களுக்காகவே மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக முன்னதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.